சிறந்த கவிதைகள் 10

1. கடவுள்களின் மடிகள்


அறுபட்ட நரம்புகளில்
விடுபட்ட உறவுகளின் மிச்சம்
சொட்டுச் சொட்டாய்க் கொட்ட

எது அழிந்து எப்படிப்போனாலும்
என்றும் அழிந்துபோகாத
பசி மட்டும்
சுயநினைவைச் சூரையாட

விழுந்துகிடக்கிறது
கிழம்
குப்பைத் தொட்டியில்

குப்பைத் தொட்டிகள்
கடவுள்களின் மடிகள்

இன்று மலர்ந்த தளிர்களும்
நாளை உதிரும் சருகுகளும்
அந்த மடிகளில்தான்
இப்போதெல்லாம்

மனிதநேயம்
நாளுக்கு நாள்
தாயம் விளையாடப்பட்டு..

பாம்பு கொத்தி பாம்பு கொத்தி
விசப்பல் அச்சுகளோடு மட்டும்
குப்பைத் தொட்டிகளில்

வேண்டாதவற்றைக்
கொட்டத்தானே
குப்பைத்தொட்டிகள்

இளைஞனே
இது உனக்கு நல்லதோர்
எச்சரிக்கை

நீதானே
நாளைய கிழம்

இன்றே
சுதாரித்துக் கொள்

உன் முதுமை வாழ்வுக்கு
சில்லறைகளைச் சேமித்துக்கொள்

இன்று நீ எறிந்ததைவிட
நாளை உன்னைத்
துரிதமாய்த் தூக்கியெறிவான்
உன் பிள்ளை

இப்போதே
கொஞ்சம் சில்லறையை
எவரும் தொடாத இடத்தில்
பதுக்கி வைத்துக்கொள்

அது
எதைப் போக்காவிட்டாலும்
அற்பப் பசியையாவது போக்கும்

2.உன்மீதான என் பிரியம் என்பது…

உன்மீதான
என் பிரியம் என்பது…

உன்னையே
பொன் தூவி வாழ்த்தும்
என் ரசனைகளின்
ஒளிப்பந்தல்

உன்னையே
வண்ணங்களாய்ச்
சுற்றித் திரியும்
என் நினைவுகளின்
நிறத்தோட்டம்

ஆனால்…
வாகனம் மூடிக்கிடக்கும்
வெண்பனிப் பொழிவைப்போல
அவை உன்னால்
வரவேற்கப்படாததாய்
ஆனபின்…

உன்
நினைவுகளின் கதகதப்புகள்
எனக்கு
வேண்டவே வேண்டாம்
என்று முடிவெடுத்து
நிறுத்திக்கொள்ள
நினைத்ததுதான் தாமதம்…

என் காடு கொள்ளாத
பட்டாம் பூச்சிகளாய்
உன் நினைவுகள் பெருக்கெடுத்துப்
படபடத்துப் பறப்பது
ஆச்சரியம்…

அந்த ஆச்சரியத்தில்
உன் மீதான என் பிரியம்
அந்தியின் உந்து காற்று ஏறிய
செம்மஞ்சள் அலைகளாய்
மேலும் மேலும் உயர்ந்து
உன்னையே
இன்னமும் இறுக்கமாய்த்
தழுவுகிறது…

என்றால்…
என் நெஞ்சப் பொதியே…
உன் மீதான என் பிரியத்தின்
உயிர்ப் பிடியிலிருந்து
நான் தப்பிப்பதுதான்
எப்படி?

3.உன்மீதான என் பிரியம் என்பது…

உன்மீதான
என் பிரியம் என்பது…

உன்னையே
பொன் தூவி வாழ்த்தும்
என் ரசனைகளின்
ஒளிப்பந்தல்

உன்னையே
வண்ணங்களாய்ச்
சுற்றித் திரியும்
என் நினைவுகளின்
நிறத்தோட்டம்

ஆனால்…
வாகனம் மூடிக்கிடக்கும்
வெண்பனிப் பொழிவைப்போல
அவை உன்னால்
வரவேற்கப்படாததாய்
ஆனபின்…

உன்
நினைவுகளின் கதகதப்புகள்
எனக்கு
வேண்டவே வேண்டாம்
என்று முடிவெடுத்து
நிறுத்திக்கொள்ள
நினைத்ததுதான் தாமதம்…

என் காடு கொள்ளாத
பட்டாம் பூச்சிகளாய்
உன் நினைவுகள் பெருக்கெடுத்துப்
படபடத்துப் பறப்பது
ஆச்சரியம்…

அந்த ஆச்சரியத்தில்
உன் மீதான என் பிரியம்
அந்தியின் உந்து காற்று ஏறிய
செம்மஞ்சள் அலைகளாய்
மேலும் மேலும் உயர்ந்து
உன்னையே
இன்னமும் இறுக்கமாய்த்
தழுவுகிறது…

என்றால்…
என் நெஞ்சப் பொதியே…
உன் மீதான என் பிரியத்தின்
உயிர்ப் பிடியிலிருந்து
நான் தப்பிப்பதுதான்
எப்படி?

 

4.புறப்படு

புறப்படும்போது நதிகள் யாவும்
திசை தெரியாமலேயே புறப்படுகின்றன
எங்கே நகர்கிறோம் என்ற
இலக்கறியாமலேயே நகர்கின்றன
ஆயினும் அவையனைத்தும்
மிகச் சரியாகக்
கடலையே சேர்கின்றன

முடிவு பற்றிய பயத்தில்
பயணம் துறப்பது மரணம்

சறுக்கில்லா கவனமும்
பூட்டில்லா செவியும் போதும்
புறப்படும் கணங்கள் ஒவ்வொன்றும்
போகும் திசையைச்
சொல்ல்லிக்கொண்டே இருக்கும்

கேட்பதை அழிப்பது கூடாது
புறப்படவேண்டும்
புறப்பட்டுவிடவேண்டும்

திரும்பிப் பார்த்து
வருந்துவதில்லை நதி

5.எதுவுமில்லாததில்…


எதுவுமில்லாததில்
எல்லாம் இருக்கிறது

எல்லாம் இருப்பதில்
எதுவுமே இல்லை

இருப்பதையும் இல்லாததையும்
ஒன்றுபோலவே காட்ட
கண்ணும் மனமும் மட்டுமின்றி
உயிரும்கூட அதிசயமாய்
ஒரே குரல் தந்தபோதும்
பறந்தோடும் காலம் வந்து
கரகர சுருதியில்
மறுப்புக்குரல் தருவது
வேடிக்கையான வாடிக்கை

இருப்பதில் இல்லாததையும்
இல்லாததில் இருப்பதையும்
எடுத்துக் கொறித்தவண்ணம்
உயிர்ப் பறவையின் சிறகசைப்பு

இருக்கின்றதென்ற எண்ணத் துடிப்பில்
இல்லாமல் இருப்பதை
தவிப்போடு தேடும் வாழ்க்கையில்
எல்லாமும் அந்த நொடிப் பூரணம்

இப்படியான
பலகோடி நொடிப் பூரணங்களின்
தொகுப்பே வாழ்க்கை

உடைந்தழிந்து உடைந்தழிந்து
கழிந்துபோனாலும்
நீரில் நீந்தும் நீர்க் குமிழ்கள்
வாழ்வில் நீந்தும் வாழ்க்கைத் துளிகளாய்
நிஜமானவைதான்

6.இருள்

விளக்கை ஏற்றினேன்
இருள் சூழ்ந்தது

பதறிப்போய்
ஊதி அணைத்தேன்

ஓ…
என்னைப்
புணர்ந்துவிட்டது
இருள்

7.வாழ்க்கை நாடகசபா

ஒரு நாடகம் தொடங்கியது
மேடையிலல்ல; என்னைச்சுற்றி

என்னைப்
பொறியிலடைத்துத் தூக்க
உறவுகளால் ஒரு தத்ரூப நாடகம்

புரிந்துபோனதும்
புதிராய்த்தான் உதிர்ந்தேன்
முதலில்

பிறகு…
நானும் கலந்துகொண்டேன்
ஆவலும் அவசியமும் உந்த

நானும் நடிக்கிறேன் என்று
அந்த நடிகர்களுக்குத் தெரியாது
என் பாத்திரத்தின் கதை வசனம்
அவர்கள் அறியாதது

இதனுள் என்னைப்போல்
இன்னும் எத்தனைபேர்
எத்தனை அரிதார முகங்களுடன்
நடிக்கிறார்களோ தெரியாது

ஒரு சிலரைக் காணும்போது
இவர்கள் இன்று நடிப்பதாய்த்
தெரியவில்லையே என்று
நானே வியக்கும் அளவுக்கு
அத்தனை இயல்பாய் நடிக்கிறார்கள்

இதில் நானும் நடிக்கிறேன் என்று
அறிய முடியாத முட்டாள்கள்
அவர்கள் என்று நான் நினைத்தால்
நான்தான் முட்டாளோ
என்று தோன்றுகிறது

அடுத்த காட்சி எனக்கு வேறாகவும்
அவர்களுக்கு வேறாகவும் இருப்பதால்
இந்தப் பல்முனை நாடகத்தில்
அடிக்கடி வசனங்களை மாற்றிக்கொண்டே
இருக்க வேண்டியதாய் இருக்கிறது

எல்லோரும் கைதேர்ந்த
வசனகர்த்தாக்களாய்
வளர்ந்துகொண்டிருக்கிறார்கள்
காட்சிகளை அருமையாய்
அரை நொடியில் திட்டமிட்டு
அப்போதே அரங்கேற்றுகிறார்கள்

திறமையற்றவர்களெல்லாம்
சில காட்சிகளிலேயே
விடைபெற்றுக்கொள்கிறார்கள்

என்றாலும்
இந்த நாடகத்தின் முடிவு
எவருக்குமே தெரியவில்லை

இந்த நாடகம்
முடிவடையாது என்றும்
புரிந்துபோய்விட்டது

சுயங்கள் கழன்றுவிழுந்து
நடிப்பே சுயங்களாகிப் போயின
மெல்ல மெல்ல

வாழ்வது எப்போது என்றுதான்
எவருக்குமே தெரியவில்லை

 

8.உன் புகைப்படம்

நான் அதிக நேரம் வாசிக்கும்
ஒரே கவிதை

புரிகிறது
புரியவில்லை
புரிகிறது
புரியவில்லை

உன் பார்வையை
வாசித்துக்கொண்டே ஒரு பைத்தியம்

பார்த்துக்கொண்டே இருக்கிறேன் நான்
சொல்லிக்கொண்டே இருக்கிறாய் நீ
புகைப்படமா இலக்கிய மேடையா

எப்போது நிறுத்துவாய் என்று
உன்னிடம் நீ கேட்டுச் சொல்

நீ சொல்லப்போகும்
சொல்லுக்குக் கட்டுப்படுமா
என் கண்கள் என்று
என்னிடம் நான்
கேட்கத் தேவையில்லை

கொஞ்சம் திரும்பு இப்படி
என்னையே பார்த்துக் கொண்டிருந்தால்
என் உயிர் திரி கொளுத்தப் பட்ட
பட்டாசுபோல் பதறுகிறது

இன்றும் அலுவலகத்துக்குத் தாமதம்
காலை உணவுக்கு விடுப்பு
காலுறை இல்லாமல் காலணி

நிலைத்த விழிகளோடு நீ
நிலைதப்பிய விழிகளோடு நான்
நேரம்போவதெங்கே தெரிகிறது

உயிர் போவதைத்தான்
உணரமுடிகிறது

9.நான்தான் வேண்டும் எனக்கு

அன்பே

நீ
கேட்டதைவிடக்
கூடுதலாய்த்தானே கொடுத்தேன்
நீ கேட்காததையும்
நானே கண்டுபிடித்துச் சேர்த்து

நீ
சொன்னதையெல்லாம்
சுத்த நெய்யினால்
சுடப்பட்ட நிஜங்கள்
என்றுதானே நம்பினேன்

காதல்
வெறும் வாய் வித்தையல்ல
செயல் என்று நான்
நிரூபிக்காத நாளுண்டா

நிறுத்தாத பேச்சும்
நிமிடத்திற்கொரு முத்தமுமென
சுவர்க்க மத்தியில்தானே
மனங்கள் மணக்க மணக்க
மல்லாந்து கிடந்தோம்

உன் கண்களுக்குள் புகுந்து
வண்ண வண்ணக் கனவுகளை
விசாரித்து விசாரித்து
அத்தனையையும் நான்
உண்மையாக்கித்தானே
நிமிர்ந்தேன்

என்னைப் பார்த்தேன்
என்று நான்
உன்னைப் பார்த்துத்தானே
சொன்னேன்

ஆழமும் அழுத்தமும்
காதலின் முத்திரைகள் என்று
உறங்காத கடலாய்க் கிடந்துதானே
உன்முன் அலைகள் தொடுத்தேன்

இன்று ஏன் என்னை
ஒன்றுமில்லாதவனாக்கிவிட்டாய்

நீயே வலியவந்து இழுத்த தேரை
ஏன் திராவகத் தீயில்
செலுத்தினாய்

உன்
இடறிய தேவைகள்
நம் காதலைக் கொன்றனவா

நீயும் நானும் காதலிக்க
ஒரு கோடி காரணங்கள் சொன்னாய்
பிரிவதற்கு மட்டும்
ஒரே ஒரு காரணம்தானே சொன்னாய்
அதுவும் உப்பு சப்பில்லாமல்

இறுதியாய்
என் உயர்காதல் விழிநோக்கும்
உரங்கெட்டுத் தலைதாழ்த்தி
நரக உதடுகள் நச்சு இழைகளாய்
ஒட்டி ஒட்டிப் பிரிய

ஒப்புக்கு நீயோர்
மன்னிப்பு கேட்டதை
புரியாத மூடனல்ல நான்
இருந்தும் அழுது நிற்கிறேன்

நீயும் நானும் ஆடிய ஆட்டங்களில்
இதய அணுக்கள் தேயத் தேய
நிஜமாய் நின்றவனாயிற்றே நான்

மௌனங்கள் பூட்டி உதடுகள் ஒட்டி
உள்ளம் திரிந்து நிற்கும் உன்னிடம்
இனி நான் என்ன கேட்பது

உன்னை இழந்தேன் என்பதை நான்
நம்பமறுத்தாலும்

தொடர்ந்து என்னை என்னாலேயே
ஏமாற்றிக்கொள்ள இயலாததால்
இன்று நான்
ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறேன்

கண்ணீர்க் கரைகளில்
மெல்ல மெல்ல என் எண்ணங்கள்
மேலே மேலே எழுகின்றன

என் பிரியமான பாவியே
நிலைக்கத் தெம்பில்லா
நெஞ்சம் கொண்ட
உன்னை மட்டுமா நான் இழந்தேன்

மென்மையும் உண்மையும்
குழைத்துக்கட்டிய
சிம்மாசனத்தில் வீற்றிருந்த
என்னையுமல்லவா இழந்துவிட்டேன்

ஆம்
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

தண்டவாளங்கள் நீளமானவை
அடுத்த ரயிலுக்கு இன்னும்
ஐந்து நிமிடங்கள் என்று
அறிவிப்புகளும் வருகின்றன

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச் சாவது
ஒருக்காலும் உசிதமல்ல

நானும் போய்
காத்திருக்க வேண்டும்

எனவே
என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

10.இன்னொரு ஜென்மம்


பச்சையிலை மாநாட்டில்
பனிவிழும் பூக்காட்டில்
வேர்நரம்பும் விட்டுவிடாமல்
விதைகளுக்கு உள்ளேயும்
தேடினேன் தேடினேன்

ஏழு வண்ணமா என் வண்ணமா
என்ற கேள்வியழகோடு
அன்றலர்ந்த ரோஜா ஒன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை ஓடிப்போ
உன் கவர்ச்சி வனப்பில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

நீண்டு நிதானமாய்
நன்னீர் சுழித்தோடும்
நதியினுள் குதித்துத்
துழாவித் துழாவித்
தேடினேன் தேடினேன்

வெள்ளிச் செதிள் சிவக்க
விளையாடும் செங்கண் சிரிக்க
கெண்டை மீனொன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை
ஓடிப்போ
உன் ஒய்யார ஆட்டத்தில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

ஆழக் கடல் தொட்டு
அடிச்சென்று மூச்சடக்கி
அகண்ட கண் விரித்து
அதுவீசும் சுடரொளியில்
தேடினேன் தேடினேன்

குட்டிப் பவளப் பேழைகளாய்க்
கொட்டிக் கிடக்கும் சிப்பிகளின்
கதவு திறந்த முத்தொன்று
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை
ஓடிப்போ
உன் ஒளிரும் கர்வத்தில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

மெத்து மெத்தென்ற
மேகக் கூட்டங்களை
முன்னும் பின்னுமாய்
இழுத்திழுத்து விலக்கித்
தேடினேன் தேடினேன்

வானத்தின் வெண்பொட்டு
வயதேறா குமரி மொட்டு
வட்டநிலா ஓடிவந்து
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை
ஓடிப்போ
உன் பகட்டுப் பேரழகில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

அண்டப் பெருவெளியில்
அயராத ராட்டினத்தில்
இங்கும் அங்குமாய்
இமை கழித்த விழிகளோடு
தேடினேன் தேடினேன்

சில்லென்ற மேனியதிரச்
சுற்றிவரும் தித்திப்பாக
செய்வாய்க் கோள் வந்து
என்னையா தேடுகின்றாய்
என்றது

இல்லை இல்லை
ஓடிப்போ
உன் புதிரான விளையாட்டில்
எனக்கொன்றும்
விருப்பில்லையென்றேன்

தேடினேன் தேடினேன்
அண்டவெளி எங்கிலும்
அக்கினியாய்த் தேடினேன்
அகப்படா நிலையிலென்
ஆழுயிர்த் துடித்தே வாடினேன்

அத்தனைக் காற்றும்
ஓய்ந்தே போனதோ
அத்தனை ஓசையும்
ஒடுங்கியே போனதோ
அத்தனை ஒளியும்
ஒழிந்தே போனதோ

நம்பிக்கை யாவும்
நஞ்சுக்குழி விழுந்து
சுட்ட பிணங்களாகின

தேடித் தவித்த விழிகள்
இமைச் சுமை தாண்டி
இதயச் சுமை தாண்டி
உயிர்ச் சுமையாகி
உதிர்ந்து உடைந்தன

தேடும் தவம் துறந்து
தேடா வரம் பெற்று
ஊனமுற்ற நாட்களுக்குள்
உயிர்ப்பளு ஏற்றிக்கொண்டு
விந்தி விந்தி நடக்கையிலே

கிழிந்த விழிகளை
மூடிக்கிடக்கும் என்
நைந்த இமைகளின் மேல்
ஒரு துளி உப்புக் கண்ணீர்

அடடா
என் கண்களுக்குள்
நீர் வற்றித்தான்
நெடுநாட்கள்
நகர்ந்துவிட்டனவே

இதென்ன இது
உள்ளிருந்து வாராமல்
வெளியிலிருந்து விழிநீர்

அதுவும்
உள்விழி நீரின்
அதே அடர்வு உப்போடு

யார் உகுக்கும்
கருணை நீர் இது

ஒரு
பூர்வ ஜென்ம வாசனை
என் நாசிக் குகைக்குள்
நர்த்தனம் ஆடுகிறது

நான்
பிறந்த போதே இழந்துவிட்ட
என் பிறப்பு வாசனையல்லவா
இது

ஓர்
இளஞ்சூட்டு ஈரம்
என் இதழ்தொட்டு மூடுகிறது

அப்பப்பா
காயங்கள் காயங்களோடு
ரணங்கள் ரணங்களோடு
ரகசிய ஒத்தடங்கள்
படபடப்பாய்ச்
சிறகடிக்கின்றன

காதுகளில் ஒரு கானம்
இதுவரை இசைக்கப்படாத
எனக்கான தாலாட்டாகத்
தழுவுகிறது

உணர்வுக்குள்
உணர்வுகள் உட்கார்ந்து
உரையாடுகின்றன

உயிருக்குள்
உயிர்கள் எழுந்து
ஓடிவிளையாடுகின்றன

நானென்ன
கனவு காண்கிறேனா

ஏக்க விழிகளுக்குக் கிடைக்கும்
செங்கோலும் சிம்மாசனமும்
கனவுகள்தானே

படக்கென
இமைகள் வெடிக்கிறேன்
நான்


நீதான் நீதான்
அது நீயேதான் என்கிறேன்

உயிருக்குள்
மௌனித்துக்கிடந்த
உள்ளுயிர்க் குரலில்

ம்ம்ம்..
நான் தேடியபோதெல்லாம்
வராமல்
தேடாதபோது ஏன் வந்தாய்
என்றேன்

‘தேடிக்கொண்டிருந்தேன்’
என்ற பதில் எனக்குள்
இன்னொரு ஜென்மத்தைப்
பொசுக்கென்று விதைத்தது

(மனதுக்கே ஜென்மங்கள் உடலுக்கல்ல)

One Response to “சிறந்த கவிதைகள் 10”

  1. Mr Adadaa Says:

    Hi, this is a comment.
    To delete a comment, just log in, and view the posts’ comments, there you will have the option to edit or delete them.

Leave a Reply


Bad Behavior has blocked 5 access attempts in the last 7 days.